Wednesday, September 16, 2009

பயனுள்ள தகவல்கள்...



கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.
3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.
4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.
5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.
6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.
7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.
10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.
இவற்றை மட்டும் தினமும் கடைப்பிடியுங்கள்... உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பத்தைக் காணுங்கள்.
"அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இதற்குக் காரணம், ஏற்கனவே பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் மேற்புற மண்ணின் சத்துக்களை உறிஞ்சியிருக்கும். கலப்பையை நன்றாகப் பதித்து, ஆழமாக உழும்போது வளமான அடித்தட்டு மண் மேலே வந்து மேற்புற மண்ணுடன் கலக்கும். ஆழமாக உழவில்லை என்றால் மேற்புற மண் மட்டுமே கலைக்கப்படும். பயிர்களுக்குத் தேவையான சத்து கிடைக்காது.

உழுவதற்கு காலதாமதமாக ஆனாலும் பரவாயில்லை, ஆழ உழுவதே சாலச்சிறந்தது. நமது கிராமப்புறங்கள் நமது நல்வாழ்க்கைக்குச் சொல்லும் பாடங்கள் எத்தனை எத்தனையோ! ஆனால், அவற்றின் அர்த்தங்களை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்வதில்லை. மேம்போக்காக வாழ்பவன் தண்ணீரில் ஆடும் காகிதக்கப்பல் போன்றவன். அலைந்துகொண்டேயிருப்பான், இலக்கைச் சென்றடைய மாட்டான்.

அது சரி.. ஏன் இலக்கைச் சென்றடைய வேண்டும்? வாழ்க்கையில் வெற்றி என்பதே ஒரு இலக்கை குறிவைத்து முன்னேறும் பயணம்தான். பல பேர் இலக்கை நிர்ணயித்துக் கொள்வார்கள். ஆனால் அதைச் சென்றடைய சரியான வழியைக் காணமாட்டார்கள். அல்லது அதைக் கண்டாலும் அதன்மேல் முழு நம்பிக்கை வைத்து முன்னேறமாட்டார்கள். ஒரு செயலில் இறங்கி விட்டால் அதன் முழு பரிணாமத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். ஆழமாக... வெகு ஆழமாகச் சென்று அதன் உட்பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

கடலில் முத்தெடுக்க வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டால் ஆழத்திற்குச் சென்றால் தான் அது கிடைக்கும். மேலே நம்மைத் தேடிவரும் என்று அலைந்து கொண்டிருந்தால் நாம் கைப்பற்றுவது காலாவதியாகிப்போன வெறும் சிப்பி மட்டுமே. முத்தைத் தவறவிட்டுவிடுவோம்.

நீங்கள் எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. தெரிந்து கொண்டது ஒரே ஒரு விஷயமென்றாலும் அதை எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறீர்கள், அதன் சகல பரிமாணங்களையும் பல கோணங்களில் அலசியிருக்கிறீர்களா என்பதே சாதிக்கத் துடிக்கும் கனவான்களுக்கு நமது கேள்வி.

மாணவர்களுக்குச் சொல்வது, ஒரு பாடத்தை நன்றாகக் கற்றுத் தெளியுங்கள், மற்றொரு பாடத்திற்குத் தாவுமுன். அந்த முதல் பாடத்தில் கற்ற விஷயங்கள் மற்ற பாடங்களை ஆழமாகக் கற்றுக் கொள்ள நல்ல அடிப்படையாக இருக்கும். "முதல் கோணல் முற்றும் கோணல்" என்பது தெரிந்ததுதானே.

இந்த நேரத்தில் சிலர் குரலை உயர்த்துவது கேட்கிறது. "இந்த அதிவேக உலகத்தில் ஒரு விஷயத்தையேப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். பல்வேறு விஷயங்களையும் நாம் ஒரே நேரத்தில் கற்றால்தான் மற்றவர்களுடன் போட்டி போட முடியும்."

ஆனால் அப்படிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் அதல பாதாளத்தில் விழுந்து கிடப்பது எளிதாகக் காணக்கிடைக்கும் காட்சி. பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள நினைப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறைந்த பட்சம் ஓரிரு விஷயங்களிலாவது உங்கள் அறிவு ஆழமாக இருக்கட்டும். ஆழம் என்பதற்கு சரியான வரையறை, ஒரு வேலை என்று எடுத்துக்கொண்டால், உங்களைத் தவிர வேறு யாரையும் அந்தக் குறிப்பிட்ட வேலைக்காக மற்றவர்கள் தேடக்கூடாது. அந்த அளவுக்குத் தெளிவும், புரிதலும் உங்களிடம் இருக்க வேண்டும்.

இதுதான் வெற்றிக்கான வழி. ஒன்றைப் பிடித்துக்கொள்ளுங்கள்... நன்றாக... மிக நன்றாக.

"அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்"
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் என்றால் அதனை எதிர்கொள்ளத் தெரியாத ஆத்திரத்தில் நாமாக நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் துன்பங்கள்தான் அதிகம். நடக்கும் நிகழ்ச்சிகளில் பத்து சதவிகிதம் தவிர்க்கமுடியாதவை. 90 சதவிகிதம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்பவை. வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது திடீரெனக் கார் அல்லது ஸ்கூட்டர் மக்கர் செய்வதோ, அல்லது யாராவது குறுக்கே வருவதோ நம் கையில் இல்லாத, நம்மால் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.

ரயிலுக்குப் போகிறோம், வழியில் அரசியல் ஊர்வலம், நம்மால் சரியான நேரத்திற்குப் போக முடியவில்லை. விமானப் பயணத்திற்குச் செல்லும்போது விமானம் மிகுந்த தாமதமாகக் கிளம்புகிறது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு நடக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலை முடியவில்லை. இப்படி எத்தனையோ சம்பவங்கள் நமது கட்டுக்குள் இல்லாமல் தினந்தோறும் நடக்கின்றன. இந்த நேரங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் 90 சதவிகிதத்தைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். அவசரமான காலை வேளை, நீங்களும் உங்கள் மனைவியும் வேகமாக ரெடியாகிக் குழந்தையைப் பள்ளிக்குச் செல்லத் தயார் செய்து, டிபன் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும். நீங்கள் மூவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் குழந்தை காப்பிக் கோப்பையைத் தட்டிவிட, புதிதாக அயர்ன் செய்து போட்டுக்கொண்டிருந்த வெள்ளைச் சட்டையில் பட்டுக் கறையாகிவிடுகிறது. இது உங்களது கட்டுப்பாட்டிலில்லாத ஒரு நிகழ்ச்சி. இதனை எப்படி எதிர்கொள்வது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

"ஆபீஸ் போற நேரத்தில இப்படியா?" என்று உங்களை நீங்களே நொந்து கொள்கிறீர்கள் அல்லது உங்கள் பெண்ணை, "கொஞ்சம் கவனம் வேண்டாம்? கண் எங்க போச்சு?" என்று கோபத்தில் கடிந்து கொள்கிறீர்கள். அந்தக் குழந்தை உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பிக்கிறது. உங்கள் மனைவியிடம், "இப்படியா காபி கப்பை மேஜை ஓரத்தில் வைப்பது?" என்று பாயலாம். அப்புறம், "நீங்கள் பார்க்கக்கூடாதா, எதற்கும் என்னையே சொல்றீங்களே?" என்று மனைவி பதிலுக்குக் கோபிக்க வார்த்தை முற்றுகிறது. நீங்கள் சத்தம் போட்டுக்கொண்டே உடையை மாற்றிக் கொள்ள உங்கள் அறைக்குச் செல்கிறீர்கள். உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசரத்தில் டிபனை அவசர அவசரமாக விழுங்குகிறாள். அவள் ரெடியாவதற்குள் ஸ்கூல் பஸ் சென்று விடுகிறது. உங்கள் மனைவிக்கோ அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. உங்கள் குழந்தையையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு காரை விரட்டுகிறீர்கள். மனதில் குமைந்து நிற்கும் கோபத்துடன் வேகமாகப் போனதற்காகப் போலிசிடம் மாட்டிக்கொண்டு அபராதமோ, மாமூலோ தண்டம் அழுதுவிட்டு, குழந்தையைப் பறக்கப் பறக்க பள்ளிக்கூடத்தில் அவள் 'டாடா' சொல்லக்கூட நேரமில்லாமல் இறக்கிவிட்டு, மனைவியை அலுவலகத்தில் எரிச்சலுடன் 'ட்ராப்' பிய பிறகு ஒரு வழியாகக் காரியாலயத்தைச் சென்றடைந்து, "அப்பாடா" என்று மூச்சுவிடும் போதுதான் கவனிக்கிறீர்கள் - "ஐயையோ கைப்பையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோமே" என்று. காலையில் பொழுதே சரியாக விடியவில்லை. நேரம் ஆக ஆகக் கோபமும் ஆத்திரமும் பொங்க எரிச்சலுடன் செய்யும் வேலையெல்லாம் தவறாக முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அன்று முழுவதுமே மோசமான நாளாகத் தொடர்கிறது. 'வீட்டுக்குப் போனால் போதும்டா சாமி' என்று நினைக்கிறீர்கள். 'சரி, வீட்டுக்குப்போகலாம்' என்று சென்றால் காலையில் போட்ட சண்டையின் வடு ஆறாமல் மனைவியும், குழந்தையும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! இவற்றுக்குக் காரணம் என்ன? ஏன் அந்த நாள் முழுவதும் மோசமாக இருந்தது? எல்லாம் நீங்கள் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டியதால்தானே இந்த நாள் மோசமாக அமைந்ததற்குக் காரணம்:

1. சட்டையில் கொட்டிய காபியா?
2. உங்கள் பெண்ணா?
3. உங்களை வழியில் நிறுத்திய போலீஸா? அல்லது
4. நீங்களா?

உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது. காபி கொட்டிய சம்பவத்தில் உங்களால் செய்திருக்கக் கூடியது ஒன்றுமில்லை. விஷயமே அந்த நிகழ்ச்சி உங்களை எப்படி பாதித்தது என்பதுதான். இப்போது நீங்கள் என்ன செய்திருக்கலாம் அல்லது செய்திருக்கவேண்டும் எனச் சற்றே ரீவைன்ட் செய்து பார்க்கலாம். காபியைத் தவறி உங்கள் மகள் உங்கள் சட்டைமேல் கொட்டிவிடுகிறாள். பதறிப்போய், 'அப்பா என்ன சொல்வாரோ?' என்று பயத்தில் அவள் அழ ஆயத்தமாகிறாள். அப்போது நீங்கள் வார்த்தைகளைக் கொட்டாமல், நிதானமாக, "போனால் போகிறது, கண்ணம்மா! பாத்தியா அப்பா சட்டை எப்படிக் கறையாயிடுத்து? அடுத்த தரத்திலேருந்து ஜாக்கிரதையா இருக்கணும், சரியா?" என்று சொல்லிவிட்டு, அறைக்குப் போய் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு, பெட்டியையும் எடுத்துக்கொண்டு வந்தால் நீங்கள் வழக்கம்போல உங்கள் பெண் தனது ஸ்கூல் பஸ்சில் ஏறுவதைப் பார்த்திருப்பீர்கள். அவளும் உங்களைப் பார்த்துக் கையசைத்திருப்பாள். மனதில் எந்த சங்கடமுமில்லாமல் ஆபீசுக்கு ஐந்து நிமிஷம் முன்னாலேயே போய்ச் சேர்ந்திருப்பீர்கள். அந்த நாளும் இனிய நாளாக அமைந்திருக்கும். வித்தியாசம் தெரிகிறதா? அடிப்படையாக விஷயங்களைப் பார்க்கும் பார்வையால் ஒவ்வொரு நாளும் சொர்க்கமாகவும் அமையலாம் அல்லது நரகமாகவும் ஆகலாம்.

எல்லாம் நீங்கள் ஒரே சம்பவத்திற்கு எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த 90/10 பார்முலாவை எந்தச் சந்தர்ப்பத்திற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் அவசரமாகச் செல்லும்போது சிவப்பு சிக்னல் உங்கள் வேகத்திற்குத் தடையாக இருக்கலாம். ஆனால் அதற்காக எரிச்சல் படாமல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப்பற்றி யாராவது தவறாகக் கூறினால் உடனே அதை மனதுக்குள்ளேயே போட்டுக்கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவர் மீது கோபிக்காதீர்கள்! அவர் அவ்வளவுதான் என்று உதறிவிடும் மனப்பக்குவம் தேவை. உங்களுக்கு ஆபீசில் பிரமோஷன் கிடைக்கவில்லையா? வேலையை விட்டுத் திடீரென நீக்கிவிட்டார்களா? என் மேல் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள். "இந்த வேலை போனால் என்ன என் தகுதிக்கு இன்னொரு வேலை கிடைக்கும்" என்று முயற்சியில் ஈடுபடுங்கள்! இதற்குப் பதிலாகக் கோபப்பட்டு ஆத்திரமடைவதால் உடம்பும், மனசும்தான் கெட்டுப்போகப் போகிறதே தவிர ஒன்றும் நடக்கப் போவதில்லை. விமானப் பயணத்தின்போது ஏதோ காரணத்தால் விமானம் தாமதமாகப் போகிறது என்பதற்காகப் பணிப்பெண்னிடம் கோபத்தைக் காண்பித்தால் அதனாலென்ன நடக்கப் போகிறது? அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைப் படியுங்கள் அல்லது உங்கள் பக்கத்துச் சீட்டில் இருப்பவரோடு பேசி நேரத்தைச் செலவிடுங்கள்.

ஒவ்வொரு சம்பவத்துக்கும் காட்டும் எதிர்வினையால் நீங்கள் நண்பர்களை இழக்கலாம். வேலையைக்கூட இழக்கநேரிடும். உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகும். ஏன் இத்தனை தொல்லை? உங்கள் வசமில்லாத ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு சில நொடிகள் நிதானமாக யோசியுங்கள். அப்புறம் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானியுங்கள். அந்தத் தீர்மானத்தில் வேகம் இருக்காது, விவேகம் இருக்கும். இப்பொழுது உங்களுக்கு 90/10 பார்முலா எவ்வளவு உபயோகமாயிருக்கும் என்று தெரிந்திருக்குமே! எந்தச் சம்பவத்திற்கும் உடனடியாக நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுத்தால் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது. எல்லா நாட்களுமே இனிய நாட்களாக இருக்கும்.

ஹாலிவுட் படங்களின் கற்பனைக் கருக்கள் அசுர வேகத்தில் நிஜமாகி வரும் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உண்மையில் மகிழ்ச்சி தருவது எது?

நண்பரிடம் கேட்டேன்! அவருக்குக் கார் வாங்க வேண்டுமாம், அதுதான் அவருக்கு மகிழ்வைத் தருமாம். ம்ம்.. நல்ல விஷயம்தான். ஆனால், கார் வாங்கிய பல பேர் அதைவிடக் காஸ்ட்லியான காரை நம்மால் வாங்கமுடியவில்லையே என ஏங்கும் மனோநிலையை அவர் அறியவில்லை போலும்!

மற்றொருவரிடம் கேட்டால் பெரிய வீடு வேண்டுமாம். பெரிய வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். அது எவ்ளோ பெரிசு என்ற அளவுகோலில் தான் இருக்கிறது வேடிக்கை. சொந்த வீடு வைத்திருக்கும் பலரிடமும் இருக்கும் சந்தோஷம் காணாமல் போய்விடும், பக்கத்திலேயே தன் வீட்டை அடித்துப்போடும் அட்டகாச அழகுடன் மற்றொரு வீடு வந்துவிட்டால்!

ஒரு முப்பதாயிரம் சம்பளம் வாங்குற அளவுக்கு வந்தாப் போதும் என்று தற்போது நினைப்பு, தன் வயதொத்த நண்பர்கள் அதே அளவு சம்பளம் வாங்கும்போது. ஆனால் அந்தச் சம்பளத்தை நாம் எட்டும்போது, அப்போதாவது சந்தோஷம் வருமா? எப்படி வரும்? நாம் ஒப்பிட்ட நண்பர்கள் நம்மைவிட டபுள் மடங்கு வாங்கிக்கொண்டிருப்பார்கள். எப்படி நமக்குத் திருப்தி வரும்? அல்லது எப்போதுதான் மனநிறைவு அடையப்போகிறோம்?

மகிழ்ச்சி என்பது ஒரு போய்ச்சேரும் இடமே அல்ல. அந்த இடத்தை அடைந்து விட்டால் இனியெல்லாம் சுகமே என்று உற்சாகமாய் ஆடிப்பாட.. அது ஒரு பயணம். இலக்கில்லாத பயணம். எப்போது முடியும் என்பது நம் கையில் இல்லை.

ஐந்திலக்க எண்ணில் மாதச் சம்பளம், வல்வோ மாடல் கார், கிரானைட்டால் இழைத்த வீடு என்பதெல்லாம் மகிழ்ச்சிக்கான எல்லைகளே அல்ல. இவையெல்லாம் நம் பயணத்தில் நடுநடுவே சந்திக்கும் மனமயக்கும் மாயைகள்.

இவைகளெல்லாம் வேண்டாம் என யாரும் ஒதுக்கச் சொல்லவில்லை. நாம் ஒன்றும் முற்றும் துறந்தவர்களல்லர். சொல்லப்போனால் அடுத்தடுத்து இவைகளை இலக்காகவைத்து நகரும்போதுதான் நமக்கும் சலிப்பின்றி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால், சந்தோஷத்தை மட்டும் இவை கிடைக்கும்வரை ஒத்திப்போடலாமா?

ஒரு ஜென் துறவியிடம் ஒருவர் கேட்டார், "ஐயா நான் சந்தோஷமாக வாழவேண்டும். எனக்கு உபதேசம் செய்யுங்கள்"

ஜென் துறவி சொன்ன பதில். "சாப்பிடும்போது சாப்பிடு, தூங்கும்போது தூங்கு"

நான்கே வார்த்தைகளில் என்ன ஒரு தத்துவம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுகூட நம் மனம் வேறு ஏதேனும் நிகழ்வைப் பற்றியோ, அந்நிகழ்வின் விளைவைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று 4 மணிக்கு ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தை வசூலித்துவிட வேண்டும். அதை வாங்கிவிட்டால் இன்று மற்றொரு ஆர்டர் போட்டுவிடலாம். கடையில் உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம், கடைவாயினுள் இட்லியைத் திணித்துக் கொண்டிருக்கும்போது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இட்லியின் சுவையை அனுபவித்தோமா?

சொல்லப்போனால் உணவில் கவனம் வைத்து அதை சாப்பிடாவிட்டால், நம் ஜீரண உறுப்புகளுக்குத் தான் வேலை அதிகமாகும். உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணம் காரணமாக சகல வயிற்று வியாதிகளும் வரும். வேலையில் கவனம் செலுத்த முடியாது, இன்னபிற விஷயங்களிலும் மனம் ஈடுபட மறுக்கும். தேவையா இது?

சாப்பிடும்போது சாப்பிடு. தூங்கும்போது தூங்கு!

ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.

கடவுள் திடீரென உலகில் தோன்றி அறிவித்தார். "இன்னும் 24 மணிநேரம் மட்டுமே இந்த உலகம் இருக்கும். பாவங்கள் அதிகரித்து விட்டதால் இதை அழிக்கப்போகிறேன்"

என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்?

நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் கண்ணீர் ததும்ப அன்புடன் கட்டித் தழுவுவதை விட வேறு எதைக்காண முடியும்?

அன்பு, பாசம், நட்பு இவை தரும் சந்தோஷ கணங்களுக்கு, பணமும் பணம் குட்டி போட்ட ஜடங்களும் நிகராகி விடுமா?

ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.

0 comments:

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP